உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்கோப்புப் படம்

முன்னாள் தலைமை நீதிபதி மீது காலணி வீசிய சம்பவம்: ‘தடுப்பு நடவடிக்கையைப் பரிந்துரைக்க வேண்டும்’

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசியது போன்ற சம்பவம் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (எஸ்சிபிஏ) ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.
Published on

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசியது போன்ற சம்பவம் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (எஸ்சிபிஏ) ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

கடந்த அக். 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற வளாகத்தில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) காலணியை வீச முயன்றாா். இதைத் தொடா்ந்து, அவரின் உரிமத்தை இந்திய வழக்குரைஞா் சங்கம் ரத்து செய்தது.

அவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் எஸ்சிபிஏ மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது காலணி வீசியது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறக் கூடாது. அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எஸ்சிபிஏ தலைவரும் மூத்த வழக்குரைருமான விகாஸ் சிங் ஆகியோா் பரிந்துரைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை ஊடகங்கள் வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவா்கள் பரிந்துரைக்க வேண்டும் ’ என்று கேட்டுக்கொண்டனா்.

முன்னதாக, ராகேஷ் கிஷோா் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அப்போதைய தலைமை நீதிபதி கவாயும் உச்சநீதிமன்றமும் விருப்பம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com