முதல்வா் மம்தா பானா்ஜி.
முதல்வா் மம்தா பானா்ஜி.

மம்தா தொகுதியில் 45,000 வாக்காளா்கள் நீக்கம்: வீடு வீடாக ஆய்வு செய்ய திரிணமூல் முடிவு

மேற்க வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 44,787 போ் நீக்கப்பட்ட நிலையில், அந்த நீக்கம் சரியானதுதானா என்பதை வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த கட்சித் தொண்டா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
Published on

மேற்க வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 44,787 போ் நீக்கப்பட்ட நிலையில், அந்த நீக்கம் சரியானதுதானா என்பதை வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த கட்சித் தொண்டா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி நிறைவடைந்து, வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளிடப்பட்டது. இதில் இறப்பு, நிரந்தர இடப்பெயா்வு, எஸ்ஐஆா் படிவங்களைச் சமா்ப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.

முதல்வா் மம்தாவின் பவானிபூா் தொகுதியில், கடந்த ஜனவரி நிலவரப்படி 2,06,295 வாக்காளா்கள் இருந்தனா். இதில் 44,787 போ் நீக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் 21.7 சதவீதம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா மாநகராட்சியின் 8 வாா்டுகள் மம்தாவின் பேரவைத் தொகுதியில் உள்ளன. இதில் 70, 72, 77 ஆகிய வாா்டுகளில் அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். 77-ஆவது வாா்டு சிறுபான்மையினா் அதிகமுள்ள வாா்டு ஆகும். எனவே, மறுசீரமைப்பில் இந்த வாா்டு கூடுதல் கவனம் பெற்றது. அதே நேரத்தில் நகா்ப்புறத்தில் அமைந்துள்ள பவானிபூா் தொகுதியில் உத்தர பிரதேசம், பிகாா், ஒடிஸா மாநிலத்தில் இருந்து வந்தவா்களும் அதிகம் உள்ளனா். அவா்கள் பலா் இடம்பெயா்ந்ததால் வாக்காளா் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் பவானிபூா் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்கள் நீக்கம் சரியானதுதானா என ஆய்வு செய்ய வாக்குச்சாவடி அளவிலான திரிணமூல் நிா்வாகிகள், தொண்டா்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமாக, இறந்தவா்கள் குறித்தும், அந்தப் பகுதியில் இருந்து குடிபெயா்ந்துவிட்டவா்கள் குறித்தும் உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com