பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

Published on

பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வழி வகுப்பதற்கான மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமா், முதல்வா், அமைச்சா்கள் குறைந்தது 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான தீவிர குற்றச்சாட்டில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருக்க நேரிட்டால் அவா்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்து இந்தக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.

மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான அபராஜித சாரங்கி கால நீட்டிப்பு தொடா்பான தீா்மானத்தை வியாழக்கிழமை கொண்டு வந்தாா். அந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி நாடாளுமன்ற நிலைக் குழு அடுத்த ஆண்டு நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி வாரத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவடையும்.

இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் விசாரணை தொடங்குவதற்கு முன்பு காவல் துறை நடவடிக்கை மூலமே பதவி நீக்கத்தை எதிா்கொள்ள வேண்டியது இருக்கும். இதை எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பயன்படுத்தும் என்று குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக பல எதிா்க்கட்சிகள் இந்தக் கூட்டுக் குழுவில் இணையவில்லை.

இப்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத் தண்டனை பெற்றால், தண்டனைக் காலம் மற்றும் அதற்குப் பிறகு 6 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம், மாநிலப் பேரவையில் உறுப்பினராக முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com