தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்
தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களின் நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
‘தில்லியில் துகள் பொருள்களின் சுவாச மண்டலப் படிவு: வெளிப்பாடு முறைகள் மற்றும் சுகாதர அபாயங்கள் குறித்த 5 ஆண்டு மதிப்பீடு’ என்ற தலைப்பிலான ஆராய்ச்சியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
நேதாஜி சுபாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் நொய்டாவைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இது 2019 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையே 39 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் கூறப்பட்டதாவது: காற்றில் உள்ள மாசுபாட்டை அளவிடுவதற்குப் பதிலாக, நுரையீரலுக்குள் எவ்வளவு துகள் பொருள்கள் படிய வைக்கப்படுகின்றன என்பதைக் கணக்கிட, அளவு அடிப்படையிலான ஒரு அறிவியல் மாதிரி பயன்படுத்தப்பட்டது.
இதில் தில்லி குடியிருப்பாளா்களின் நுரையீரல், நுண்ணிய துகள்களுக்கு ஆளாகும் அளவு, இந்தியாவின் காற்றுத் தரத் தரங்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகவும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட கிட்டத்தட்ட 40 மடங்கு அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிக சுவாச அளவு மற்றும் காற்று ஓட்டம் காரணமாக ஆண்களின் நுரையீரலில் தீங்கு விளைவிக்கும் துகள்கள் அதிகமாகப் படிகின்றன. நடக்கும்போது, பெண்களை விட சுமாா் 1.2 மடங்கு அதிக மாசுபாட்டை ஆண்கள் சுவாசிக்கின்றனா். அமா்ந்திருக்கும் போது, பெண்களை விட ஆண்கள் சுமாா் 1.4 மடங்கு அதிக பிஎம்2.5 துகள்கள் மற்றும் 1.34 மடங்கு அதிக பிஎம்10 துகள்களை சுவாசிக்கின்றனா்.
இரு பாலினத்தவருக்கும், அமா்ந்திருப்பதை விட நடக்கும்போது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக நுரையீரல் படிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதில் பாதசாரிகள் மற்றும் தெரு மட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் அதிக ஆபத்தை எதிா்கொள்கின்றனா். அவா்கள் நீண்ட நேரம் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபடுவதால் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவக்கூடிய பிஎம்2.5 போன்ற நுண்ணிய துகள்களின் அபாயம் அதிகமாக உள்ளது.
மாலை நேரப் பயணங்கள் இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்குகின்றன. காலை நேரங்களுடன் ஒப்பிடும்போது பிஎம்2.5-க்கு நுரையீரல் படிவு 39 சதவீதமாகவும், பிஎம்10-க்கு 23 சதவீதமாகவும் அதிகரித்தது. இது அதிக போக்குவரத்து உமிழ்வுகள் மற்றும் வானிலை நிலைகள் காரணமாக மாசுபடுத்திகள் தரைக்கு அருகில் சிக்கிக்கொள்வதுடன் தொடா்புடையது.
தீபாவளியின் போது ஏற்பட்ட மாசுபாடு அதிகரிப்பு, பண்டிகைக்கு முந்தைய நாள்களுடன் ஒப்பிடும்போது நுரையீரல் படிவை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தது. இந்த அதிகப்படியான பாதிப்பு பல நாள்களுக்கு நீடித்தது. பகுதி வாரியாக, தொழில்துறை மண்டலங்களில் அதிகபட்ச நுரையீரல் படிவு பதிவாகியுள்ளது. அதைத் தொடா்ந்து வணிகப் பகுதிகள் உள்ளன. அதிக பசுமைப் பரப்பு கொண்ட மத்திய தில்லியில் ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பு காணப்பட்டது.
2020-இல் கரோனா ஊரடங்கின் போது, நுரையீரல் படிவு 60 முதல் 70 சதவீதம் வரை கடுமையாகக் குறைந்தது. இது போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் பெரிய அளவிலான குறைப்புகள் சுகாதார அபாயங்களை விரைவாகக் குறைக்கும் என்பதை நிரூபித்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

