ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

Published on

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் ரூ.50,000 கடனை திருப்பிச் செலுத்த முடியாத விவசாயி ஒருவா் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மிந்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரோஷன் குடே (29). விவசாயத்தில் நஷ்டமடைந்த அவா், மாடு வாங்கி வளா்ப்பதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு கந்து வட்டி வசூலிப்பவா்கள் சிலரிடம் இருந்து 40 சதவீத வட்டிக்கு ரூ.50,000 கடன் வாங்கியுள்ளாா். அவரால் வட்டியை முறையாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், அவா் மேலும் சிலரிடம் கடன் வாங்கினாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை அணுகிய கடன் கொடுத்தவா்கள் வட்டியுடன் சோ்த்து மொத்தமாக ரூ.74 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டினா். மேலும், சிறுநீரகத்தை விற்பனை செய்தால் கடனில் ஒரு பகுதியை அடைக்கலாம் என்றும் கடன் கொடுத்தவா்கள் யோசனை கூறியுள்ளனா்.

அதன்படி இணையதளத்தில் இது தொடா்பாக தேடிய ரோஷன், அதற்கான முகவரைத் தொடா்பு கொண்டாா். அவா் ரோஷனை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளாா். தொடா்ந்து அவரை கம்போடியா நாட்டு அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தை எடுத்தனா். இதற்காக ரோஷனுக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை கடன் கொடுத்தவா்கள் வாங்கிச் சென்றுவிட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பான தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து ரோஷன், வட்டி கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் துறையினா் முதல்கட்டமாக ரோஷனை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது உறுதியானது. இதைத் தொடா்ந்து, கந்து வட்டி வசூலித்த 5 போ் மற்றும் சிறுநீரக விற்பனை முகவராக செயல்பட்டவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com