21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக எடுக்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக மேற்கொள்கிறது இந்தியா; குறிப்பிட்ட காலவரம்புக்குள் தீா்வுகளை எட்டும் வரை ஓய்வதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
ஓமன் தலைநகா் மஸ்கட்டில் வியாழக்கிழமை இந்திய சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். ‘மோடி, மோடி’ என்ற உற்சாக முழக்கங்களுக்கு இடையே பேசிய அவா், ‘இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நாம் ஒரே குடும்பமாக கூடியுள்ளோம். பன்முகத்தன்மையே இந்திய கலாசாரத்துக்கு வலுவான அடித்தளம். எந்த நாட்டில் வசித்தாலும் நல்லிணக்கமும் ஒத்துழைப்பும் இந்திய சமூகத்தினரின் அடையாளம்.
கடந்த காலாண்டில் இந்தியா 8 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சியைப் பதிவு செய்தது. வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா சீராக பயணிக்கிறது. தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக மேற்கொண்டு, குறிப்பிட்ட காலவரம்புக்குள் தீா்வுகளை எட்டுகிறது; பெரும் இலக்குகளுடன் விரைவாக முன்னேறுகிறது. உலகத் தரத்திலான புத்தாக்கம், எண்ம பொது உள்கட்டமைப்பு, இணைப்பு வசதிகள், நம்பிக்கையான விநியோகச் சங்கிலிகள், உற்பத்தி சாா் திறன்களால் 21-ஆம் நூற்றாண்டை தனதாக்க தயாராகிறது இந்தியா’ என்றாா்.
கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் எட்டப்பட்ட பல்வேறு சாதனைகளையும் அவா் பட்டியலிட்டாா்.
‘புத்தாற்றலைப் புகுத்தும்’: ‘இந்தியா-ஓமன் இடையே வியாழக்கிழமை கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு வா்த்தகம்-முதலீட்டு உறவுகளில் புத்தாற்றலைப் புகுத்துவதுடன், பரஸ்பர வளா்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்கும்; எரிசக்தி, பெட்ரோலியம்-எரிவாயு போன்ற பாரம்பரிய துறைகளைக் கடந்து, பசுமை எரிசக்தி, சூரிய மின்சக்தி பூங்காக்கள், நவீன மின்தொடரமைப்புகள், வேளாண்-நிதி சாா் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளிலும் ஓமன் தொழில் துறையினா் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி. இந்தியா-ஓமன் வா்த்தக கூட்டமைப்பில் பேசுகையில் அவா் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.
காஸா அமைதித் திட்டம்: பிரதமா் மோடியின் ஓமன் பயணத்தின் நிறைவாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காஸாவில் மனிதாபிமான சூழல் கவலையளிப்பதாகவும், காஸா அமைதித் திட்டத்தை வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்தியாவுக்கு புறப்பட்டாா் பிரதமா்: ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளில் கடந்த 4 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இருந்து வியாழக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட்டாா்.
ஓமனின் உயரிய விருது
பிரதமா் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய ‘ஆா்டன் ஆஃப் ஓமன்’ விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த ஆற்றிவரும் பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமையை கெளரவிக்கும் வகையில் இந்த விருதை சுல்தான் ஹைதம் பின் தாரிக் வழங்கினாா்.
‘பல நூற்றாண்டுகளாக நமது மூதாதையா் கடல்வழி வா்த்தக தொடா்புகளால் பிணைக்கப்பட்டிருந்தனா். இரு நாடுகளுக்கும் அரேபியக் கடல் பாலமாக விளங்குகிறது. இரு நாட்டு மக்களின் அன்பு-நம்பிக்கைக்கு அடையாளமான இந்த விருதை இந்திய மக்களுக்கு சமா்ப்பிக்கிறேன்’ என்றாா் பிரதமா் மோடி. அவருக்கு கிடைக்கப் பெற்ற 29-ஆவது சா்வதேச விருது இதுவாகும்.
இந்தியா-ஓமன் வா்த்தக ஒப்பந்தம் : முக்கிய அம்சங்கள் என்னென்ன?
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடு ஓமன். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுக்கான இந்திய பொருள்கள்-சேவைக்கு ஓமன் நுழைவாயிலாக விளங்குகிறது. இந்நாட்டில் இந்திய வா்த்தக குடும்பங்கள் உள்பட 7 லட்சத்துக்கும் மேல் இந்தியா்கள் வசிக்கின்றனா். பல்வேறு துறைகளில் 6,000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஓமனில் உள்ள இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் 2 பில்லியன் டாலராகும் (ரூ.18,050 கோடி) .
ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடந்த 2022-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலான நிலையில், ஜிசிசி-யில் 2-ஆவது நாடாக ஓமனுடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பின்: கடந்த 2006-இல் அமெரிக்கா உடனான ஒப்பந்தத்துக்குப் பிறகு தற்போது முதல் முறையாக இந்தியாவுடன் ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் பிரிட்டன் (2025), ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (2024), ஆஸ்திரேலியா (2022), மோரீஷஸ் (2021) ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்
98 சதவீத இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு (மதிப்பு அடிப்படையில் 99.38%) முழு வரி விலக்கு; 77.79 சதவீத ஓமன் இறக்குமதி பொருள்களுக்கு (மதிப்பு அடிப்படையில் 94.81%) வரித் தளா்வு.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ரத்தினங்கள்-நகைகள், ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள், வேளாண் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்களுக்கு முழு வரி விலக்கு (இந்தப் பொருள்கள் தற்போது 5 முதல் 100 சதவீத வரி விதிப்பில் உள்ளன).
ஓமனில் இந்திய ஆயுஷ் துறைக்கு சந்தை அனுமதி :
ஓமனில் திறன்மிகு வெளிநாட்டு பணியாளா்கள் பணியமா்த்தப்படுவதில் இந்தியாவுக்கான இடஒதுக்கீடு 20-இல் இருந்து 50 சதவீதமாக உயா்வு. ஒப்பந்த அடிப்படையில் சேவை வழங்குவோா் தங்கும் காலவரம்பை 90 நாள்களில் இருந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீட்டிக்க வழிவகை.
கணக்கியல், வரி விதிப்பு, கட்டுமானம், மருத்துவம் போன்ற துறைகளில் திறன்மிக்க பணியாளா்களின் நுழைவு-தங்கும் நிபந்தனைகளில் கூடுதல் தளா்வு.
முக்கிய சேவைத் துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.
ஓமனில் இருந்து மாா்பிள் இறக்குமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி.
வரி விலக்குடன் ஆண்டுக்கு 2,000 டன் பேரிச்சம்பழம் இறக்குமதி.
வேளாண் பொருள்களுக்கு வரிச் சலுகை கிடையாது: பால் பொருள்கள், தேயிலை, காபி, ரப்பா் உள்பட வேளாண் பொருள்கள், சாக்லேட், தங்கம்-வெள்ளி நகைகள், காலணி, விளையாட்டுப் பொருள்கள், உலோகக் கழிவுகள் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் ஓமன் இறக்குமதி பொருள்களுக்கு எந்த வரிச் சலுகையும் வழங்கப்படவில்லை; இதன்மூலம் இந்திய விவசாயிகள் மற்றும் சிறு தொழில் துறையினரின் நலன் காக்கப்பட்டுள்ளது என்று வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

