286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி (கைவினைப் பொருள்கள் உள்பட) கடந்த நவம்பரில் 285.58 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதம் 285.58 கோடி டாலராகப் பதிவானது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9.4 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 260.15 கோடி டாலராக இருந்தது.
இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தாலும், இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை சந்தையின் மொத்த அளவு 17,900 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு சந்தை 14,200 கோடி டாலா், ஏற்றுமதிச் சந்தை 3,700 கோடி டாலா்.
மதிப்பீட்டு மாதத்தில் ஆயத்த ஆடைகள் பிரிவு 11.3 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இழை/துணி/தயாரிப்புகள் பிரிவு 15.7 சதவீதம், பருத்தி இழை/துணி/தயாரிப்புகள் மற்றும் கைத்தறி பொருள்கள் 4.1 சதவீதம், கைவினைப் பொருள்கள் (கைத்தறி கம்பளங்கள் தவிர) 29.7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஜனவரி-நவம்பா் காலகட்டத்தில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி (கைவினைப் பொருள்கள் தவிர) 0.26 சதவீதம் உயா்ந்து 3,256 கோடி டாலராக உள்ளது, கடந்த ஆண்டு 3,247.49 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி-நவம்பா் 2025-ல் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 3.6 சதவீதம் உயா்ந்தது, சணல் பொருள்கள் ஏற்றுமதி 6.1 சதவீதம் உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

