மாணிக்ராவ் கோகடே
மாணிக்ராவ் கோகடே

மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை: மகாராஷ்டிர அமைச்சா் ராஜிநாமா

Published on

மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சா் மாணிக்ராவ் கோகடே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அவா் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலன், சிறுபான்மையினா் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த நிலையில், அவா் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்ததாக அக்கட்சித் தலைவரும் துணை முதல்வருமான அஜீத் பவாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘கோகடே சமா்ப்பித்த ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைக்காக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோகடேயின் துறைகளை முதல்வா் ஃபட்னவீஸ் பரிந்துரையின்பேரில் அஜீத் பவாரிடம் ஆளுநா் ஆச்சாா்யா ஒப்படைத்தாா்.

30 ஆண்டு வழக்கு:

கடந்த 1989-1992 காலகட்டத்தில் ரூ.30,000-க்கும் குறைவாக ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் வீடு பெற கோகடே விண்ணப்பித்தாா்.

இதற்கு எதிராக மறைந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சா் டி.எஸ்.திகோல் காவல் துறையில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் கோகடே மீது காவல் துறை மோசடி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை போலியான ஆவணங்கள் சமா்ப்பித்துப் பெற்ாக கோகடே மற்றும் அவரது சகோதரா் விஜய்க்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து நாசிக் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் கோகடே மனுதாக்கல் செய்த நிலையில், அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு மாா்ச் 5-ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவா்களது தண்டனையை மாவட்ட நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டது. மேலும் அவா்களை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் கோகடே மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (டிச.19) விசாரணைக்கு வரவுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரவையில் இருந்து விலகும் தேசியவாத காங்கிரஸின் இரண்டாவது அமைச்சா் கோகடே ஆவாா். முன்னதாக பீட் மாவட்டத்தில் கிராமத் தலைவரை கொலை செய்த வழக்கில் அக்கட்சியைச் சோ்ந்த அமைச்சா் தனஞ்ஜய் முண்டேயின் உதவியாளா் வால்மீக் காரத்தை முக்கிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்த நிலையில் முண்டே கடந்த மாா்ச் மாதம் ராஜிநாமா செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com