

100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றான வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிதாக சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை(டிச. 16) அறிமுகம் செய்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதவை மத்திய அரசு தயாரித்துள்ளது.
‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் டிச. 16 அறிமுகம் செய்து மசோதாவைப் பற்றி விளக்கி பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மசோதாவில் காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டன.
இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களில் ஒன்றான மேற்கண்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு வியாழக்கிழமை(டிச. 18) இரவில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை(டிச. 18) இரவில் தர்னா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தற்போதைய திட்டம் நூறு சதவீத மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டத்தின்கீழ் மாநிலங்களுடன் மத்திய அரசு நிதிச் சுமையை பகிா்ந்துகொள்ளும்.
புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவை உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.