மேற்கு வங்க தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய படை பாதுகாப்பு!
மேற்கு வங்க மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய காவல் படை வீரா்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்ஐஆா்) திருத்தத்துக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதையடுத்து, தோ்தல் ஆணையம் சாா்பில் அனுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்த பரிந்துரைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கொல்கத்தாவில் உள்ள தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய காவல் படையினா் வெள்ளிக்கிழமை (டிச.19) முதல் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு வங்கத்தில் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி முதல் டிசம்பா் 11 வரை எஸ்ஐஆா் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், டிசம்பா் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சுமாா் 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.
முன்னதாக, மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணியின்போது மாநிலத்தில் 4 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தற்கொலை செய்துகொண்டனா். இதற்கு, எஸ்ஐஆா் வேலைப் பளுவும், அதன் மீதான அச்சமுமே காரணம் என திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதனிடையே, வேலைப் பளுவை காரணம் காட்டி பிஎல்ஓ-க்களில் ஒரு பிரிவினா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் எஸ்ஐஆா் பணிக்கு எதிராக ஆளுங்கட்சி தரப்பில் மாபெரும் கண்டனப் பேரணியும் நடத்தப்பட்டது.
இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டது, அங்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய காவல்படை பாதுகாப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களில் மத்திய காவல் படையினா் வெள்ளிக்கிழமை (டிச.19) முதல் பாதுகாப்பு அளிப்பா். தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் அரசு வாகனத்தில் வெளியே பயணங்கள் மேற்கொள்ளும்போதும் மத்திய காவல் படையினா் பாதுகாப்பு அளிப்பா்’ என்றாா்.
