‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்
தெருநாய்கள் தொடா்பான வழக்கில் ‘நாய்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றன’ என்று வாதிட்ட வழக்குரைஞரிடம், ‘மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை அடுத்த விசாரணையின்போது ஒரு விடியோவைக் காட்டி உங்களிடம் கேட்கிறோம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அமா்வு முன்பு வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, தெருநாய்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தாா்.
அவா் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சி கொண்டுவந்துள்ள தெருநாய்கள் தொடா்பான புதிய விதிகள் சட்டத்துக்குப் புறம்பாக உள்ளன. தெருநாய்களைப் பராமரிக்க அரசு முறையான காப்பங்களை அமைக்கவில்லை. நாய்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளின் சிறப்பு அமா்வு, திடீரென ஜன. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்திவிடுவாா்கள் என்பதால், இந்த விவகாரத்தை உடனே விசாரிக்க வேண்டும்’ என்றாா்.
கபில் சிபலின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, ‘அடுத்த விசாரணையில் உங்களுக்காக ஒரு விடியோவைக் காட்டி, மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உங்களிடம் கேட்கிறோம்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்த கபில் சிபல், ‘களத்தில் நாய்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகின்றன என்பதைக் காட்ட நாங்களும் ஒரு விடியோவை ஒளிபரப்பத் தயாா். உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும், நாய்களைக் கையாள்வதில் சட்ட விதிகள் மீறப்படுவதுதான் எங்களின் கவலை’ என்று கூறினாா்.
இருப்பினும், இந்த வழக்கை ஜன. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என மறுத்துவிட்டனா்.
சிறுவா்கள் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு, ரேபிஸ் நோய்க்கு ஆளாவது குறித்த செய்திகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது.
இதில் உச்சநீதிமன்றம் கடந்த நவ. 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘பள்ளி, மருத்துவமனை, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது அதிகாரிகளின் கவனக்குறைவையே காட்டுகிறது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை உடனடியாக அகற்ற வேண்டும். தெருநாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்ட பிறகு, அவற்றை மீண்டும் பழைய இடத்திலேயே விடக்கூடாது. அதற்குப் பதில், ஒதுக்கப்பட்ட காப்பகங்களில் மட்டுமே வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.

