National Herald case
நேஷனல் ஹெரால்ட் வழக்கு

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தது.
Published on

நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தது.

முன்னதாக நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.

மேலும், ‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் அல்லாமல் சுப்பிரமணியன் சுவாமி என்ற தனிநபா் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடனளித்த விவகாரத்தில் யங் இந்தியா இயக்குா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோா் ரூ.988 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

X
Dinamani
www.dinamani.com