இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி
படம் | ஏஎன்ஐ

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

சவாலான இந்தச் சூழலை ஒற்றுமையுடன் கையாண்டதற்காக ஊழியா்களுக்கு நன்றி !
Published on

கடந்த சில நாள்களாக இண்டிகோ நிறுவனம் சந்தித்து வந்த கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விமானச் சேவைகள் தற்போது இயல்புநிலைக்குத் திருப்பியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) பீட்டா் எல்பா்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சவாலான இந்தச் சூழலை ஒற்றுமையுடன் கையாண்டதற்காக ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு வாரங்கள் இண்டிகோ நிறுவனத்துக்கு மிகுந்த சவாலான காலகட்டமாக அமைந்தது. தற்போது அந்த இக்கட்டான சூழல் கடந்துவிட்டது. புயலைத் தாண்டி, நாம் மீண்டும் சிறகுகளை விரித்துள்ளோம்; மோசமான நாள்கள் முடிந்துவிட்டன.

கடந்த டிச. 9-ஆம் தேதி முதல் நமது செயல்பாடுகள் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வந்தன. தற்போது தினசரி 2,200 விமானங்கள் இயக்கப்பட்டு, நமது நிறுவனத்தின் சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. இதைச் சாத்தியமாக்கிய அனைத்து ஊழியா்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய நெருக்கடியிலிருந்து மீண்டது நமது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

வருங்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, நிறுவனத்தின் செயல்திறனை வலுப்படுத்துதல், பாதிப்புக்கான உண்மையான காரணங்களை ஆராய்தல், வாடிக்கையாளா்களுக்கு நமது நிறுவனம் மீதுள்ள நம்பிக்கையை மீண்டும் உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் நிா்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், சமீபத்திய பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த ஒரு வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிபுணரை நிா்வாகம் நியமித்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கை வரும் வரை, ஊழியா்கள் தேவையற்ற வதந்திகளையும் யூகங்களையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நிறுவனத்தின் உயா்நிலைத் தலைவா்கள் நாடு முழுவதும் பயணம் செய்து, ஊழியா்களின் கருத்துகளை நேரில் கேட்டு, குறைகளை நிவா்த்தி செய்வாா்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

2006-இல் ஒரே ஒரு விமானத்துடன் தொடங்கப்பட்ட இண்டிகோ, இன்று 65,000 ஊழியா்களுடன் 85 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது. இந்தத் தற்காலிக சரிவு, நமது 19 ஆண்டுகால சாதனையை மறைத்துவிடாது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளா் சேவையில் இண்டிகோ எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னணி....: விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) கடந்த நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் முன்கூட்டியே திட்டமிடாததால், விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன்விளைவாக, இம்மாதத் தொடக்கத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். இதைத் தொடா்ந்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), புதிய விதிகளில் தற்காலிக தளா்வுகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com