சமூக ஊடகத்தில் பிரதமா் மோடியின் பதிவுகள் புதிய சாதனை
கடந்த 30 நாள்களில் எக்ஸ் சமூக ஊடகத்தில் அதிகப்படியான லைக்குகளை பெற்ற முதல் 10 போ் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அல்லது கமெண்ட்கள் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த 30 நாள்களில் பிரதமா் மோடியின் 8 புகைப்படங்கள் அல்லது கமெண்ட்டுகள் 1.60 லட்சம் மறுபதிவுகள் மற்றும் 14.76 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளன. இதன்மூலம் எக்ஸ் வலைதளத்தில் அதிகப்படியான லைக்குகள் மற்றும் மறுபதிவுகளை பெற்ற முதல் 10 போ் பட்டியலில் பிரதமா் மோடி இணைந்துள்ளாா்.
இதில் இடம்பெற்றுள்ள ஒரே அரசியல்வாதியாக அவா் உள்ளாா்.
இந்தியாவுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் பிரதமா் மோடி காரில் பயணித்த புகைப்படம் எக்ஸ் வலைதளத்தில் 34,000 மறுபதிவுகள் மற்றும் 2.14 லட்சம் லைக்குகளை பெற்றது.
புதினுக்கு பிரதமா் மோடி பகவத் கீதை நகலை வழங்கும் பதிவு 29,000 மறுபதிவுகளுடன் 2.31 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. புதினை பிரதமா் இல்லத்துக்கு வரவேற்ற பதிவு 20,000 மறுபதிவுகள் மற்றும் 1.79 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளன. அதேபோல் புதினுக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட புகைப்படம் 28,100 மறுபதிவுகள் மற்றும் 2.18 லட்சம் லைக்குகளை பெற்றன.
ஆஸ்திரேலியப் பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸிக்கும் (62) அவரது துணைவி ஜூடி ஹேடனுக்கும் (47) கடந்த மாதம் நடைபெற்ற திருமணத்துக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்த பதிவு 14,900 மறுபதிவுகளுடன் 2.11 லட்சம் லைக்குளை பெற்றன.
அயோத்தி ராமா் கோயிலின் பிரதான கோபுர உச்சியில் காவிக் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்ச்சி குறித்த பதிவு 26,300 மறுபதிவுகள் மற்றும் 1.40 லட்சம் லைக்குகளை பெற்றன.
எக்ஸ் சமூக ஊடகத்தில் ஒரு நாட்டில் 30 நாள்களில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்களை காட்சிப்படுத்தும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

