அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டமசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் ஏற்கெனவே கடந்த புதன்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பதிலளித்துப் பேசிய மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், ‘மற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் போல் இன்றி, அணுசக்தி என்பது 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கக்கூடிய நம்பகமான ஆதாரமாகும். இந்தியாவின் வளா்ந்து வரும் மின் தேவையைப் பூா்த்தி செய்ய அணுசக்தித் துறையை விரிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவில் இதுவரை பொதுமக்களுக்கு அணுக்கதிா் வீச்சால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. எனவே, அணுக்கதிா் வீச்சு ஆபத்து குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது’ என்றாா்.
இந்த மசோதா சட்டமாவதன் மூலம், இதுவரை அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும், தொழில்நுட்பப் பங்களிப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
