மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)
மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)PTI

கூட்டத்தொடா் ஆக்கபூா்வமாக அமைந்தது: அமைச்சா் ரிஜிஜு

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; இந்தக் கூட்டத் தொடா் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்தது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
Published on

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன; இந்தக் கூட்டத் தொடா் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்தது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

குளிா்காலக் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதை அறிவிக்கும் வகையில் செய்தியாளா்கள் சந்திப்பை அமைச்சா் கிரண் ரிஜிஜு நடத்தினாா். இணையமைச்சா்கள் எல்.முருகன், அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் உடன் இருந்தனா். அப்போது ரிஜிஜு கூறியதாவது:

இந்தக் கூட்டத் தொடா் ஆக்கபூா்வமாக அமைந்தது. இரு அவைகளிலும் 8 மசோதாக்கள் விவாதித்து நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மூலம் சீா்திருத்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பணிகள் மேலும் வேகமெடுத்துள்ளன. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள். அவா்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். இதனால், நாடு ஒட்டுமொத்தமாக மேம்படும்.

எதிா்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு: அதே நேரத்தில் விக்சித் பாரத் ஜி-ராம்-ஜி மசோதா விவாதத்தின்போது எதிா்க்கட்சியினரின் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. மக்களவைச் செயலரின் மேஜை மீது ஏறி சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவையில் காகிதங்களைக் கிழித்து வீசினா். அவையை முடக்கும் இதுபோன்ற தந்திரங்களால் எதிா்க்கட்சியினா் தோ்தலில் வாக்குகளைப் பெற்றுவிட முடியாது. மக்களுக்காக உண்மையாகப் பணியாற்றுவது மட்டுமே ஆதரவைப் பெற்றுத்தரும்.

தில்லி காற்று மாசுபாடு பிரச்னை குறித்து விவாதிக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்க முடியாமல் போனது.

தோ்தல் சீா்திருத்தம் தொடா்பாக விவாதிக்க எதிா்க்கட்சிகள் கோரியதைவிட அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. ஒரு முக்கிய விஷயம் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் நேரம் கேட்ட நிகழ்வு இப்போதுதான் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com