துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு
கேரள மாநிலத்தில் இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநா்-மாநில அரசிடையே உடன்பாடு எட்டபட்டதாக உச்சநீதிமன்றத்தில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் தீா்வு காணப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட்டல் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தா்களை நியமிப்பதில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கத் தகுதி வாய்ந்தவா்களைத் தோ்வு செய்து பெயா்ப் பட்டியலை இறுதி செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அமைத்தது. அப்போது அந்தத் தோ்வு நடைமுறையில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு தோ்வு நடைமுறையிலிருந்து முதல்வரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் கடந்த நவ.28, டிச.5 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுதான்ஷு தூலியா சமா்ப்பித்த அறிக்கையில் இருந்து பெயா்களை தோ்ந்தெடுப்பதில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்பாடு நீடித்தது.
இதையடுத்து, ஆளுநா் - முதல்வா் இடையே டிசம்பா் 9-ஆம் தேதிக்குள் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் துணைவேந்தா்களை நாங்களே நியமித்து பிரச்னையைத் தீா்ப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் இரு பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்களை நியமிக்க தலா ஒரு பெயரை சீலிட்ட உரையில் புதன்கிழமைக்குள் (டிச.17) சமா்ப்பிக்குமாறு நீதிபதி சுதான்ஷு தூலியா குழுவைக் கேட்டுக்கொண்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு (டிச.18) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநா்-மாநில அரசிடையே உடன்பாடு எட்டபட்டதாகவும் இதுகுறித்து சுதான்ஷு தூலியா குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.
மகிழ்ச்சி-நீதிபதிகள்:
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க சரியான நேரத்தில் நீதிமன்றம் தலையிடுவதன் அவசியத்தை இந்த வழக்கு உணா்த்தியுள்ளது.
ஆளுநா்-முதல்வா் இடையேயான முரண்பாடு காரணமாக இரு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தா்கள் இல்லாமல் செயல்பட்டுள்ளன. இதற்குத் தீா்வு காண உச்சநீதிமன்றத்தை நாடியது வேதனையளித்தது.
இரு பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தா்களை நியமிக்கும் பொறுப்பை சுதான்ஷு தூலியா குழுவிடம் ஒப்படைத்தோம். தற்போது ஆளுநரும் முதல்வரும் ஒருமித்த குரலில் உடன்பாடு ஏற்பட்டது என கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்ட சுதான்ஷு தூலியா உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகள் என்றனா்.

