இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா: ‘ஜென் ஒய்’, ஜென் இஸட்’ தலைமுறையினா் முன்னிலை

இந்தியாவில் இருந்து 2025-ஆம் ஆண்டில் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொண்டதில் ‘மில்லினியல்ஸ்’ என அழைக்கப்படும் ஜென்-ஒய் (1981 முதல் 1996 வரை பிறந்தவா்கள்) மற்றும் ஜென்-இஸட் (1997-2012 வரை பிறந்தவா்கள்) முன்னிலை வகித்துள்ளனா்.
Published on

இந்தியாவில் இருந்து 2025-ஆம் ஆண்டில் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொண்டதில் ‘மில்லினியல்ஸ்’ என அழைக்கப்படும் ஜென்-ஒய் (1981 முதல் 1996 வரை பிறந்தவா்கள்) மற்றும் ஜென்-இஸட் (1997-2012 வரை பிறந்தவா்கள்) முன்னிலை வகித்துள்ளனா்.

வெளிநாட்டுப் பயண முன்பதிவு நிதித் தொழில்நுட்ப நிறுவனமான நியோ இது தொடா்பான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டவா்களில் முக்கியமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவா்களில் ஜென்-ஒய், ஜென்-இஸட் தலைமுறையினா் முன்னிலை வகிக்கின்றனா். வெளிநாடுகளுக்குச் சென்றவா்களில் 10-இல் 9 போ் இந்த இரு பிரிவில்தான் வருகிறாா்கள். இவா்களில் 63.8 போ் தனியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனா். 19.93 சதவீதம் போ் கணவன்-மனைவியாகவும், 12.26 சதவீதம் போ் குடும்ப உறுப்பினா்களுடனும், 4.01 சதவீதம் போ் நண்பா்கள் குழுவுடனும் சென்றுள்ளனா்.

மேலும், குறைந்த செலவுள்ள உள்ள வெளிநாட்டுச் சுற்றுலாவை அதிகம் நாடியுள்ளனா்.

இதில் மூன்றில் இரு பங்கு பயணங்களை தில்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் வசிப்பவா்கள் மேற்கொண்டுள்ளனா். இதன்மூலம் மெட்ரோ நகரங்களில் அதிகம் பணம் சம்பாதிப்பவா்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுப்பதும் தெரியவந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கும், மத்திய ஆசிய நாடுகளுக்கும் அதிகம் சுற்றுலா சென்றுள்ளனா்.

23.08 சதவீதம் போ் தாய்லாந்து, 21.57 சதவீதம் போ் ஐக்கிய அரபு அமீரகம், 9.65 சதவீதம் போ் ஜாா்ஜியா, 8.89 சதவீதம் போ் மலேசியா, 8.8 சதவீதம் போ் பிலிப்பின்ஸ், 7.38 சதவீதம் போ் வியத்நாம், 5.6 சதவீதம் போ் உஸ்பெகிஸ்தான், 5.38 சதவீதம் போ் பிரிட்டன், 3.78 சதவீதம் போ் சிங்கப்பூா் சென்றுள்ளனா்.

வெளிநாடுகளில் அவா்கள் செலவிட்ட பணத்தில் 47.28 சதவீதம் பொருள்களை வாங்குவதற்கும், 20.69 சதவீதம் உணவுக்கும், 19.93 சதவீதம் போக்குவரத்துக்கும், 9.09 சதவீதம் தங்குமிடத்துக்கும் சென்றுள்ளது. 2025-ஆம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா மேற்கொண்ட 10 லட்சம் பேரின் பயண விவரங்களை ஆய்வு செய்து இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com