தில்லி காவல் அகாதெமியில் தகவல்தொடா்பு இயக்குநா்களுக்கு பயிற்சி நிறைவு விழா
தில்லி காவல் துறையின் கம்பியில்லா பயிற்சி அதிகாரிகள் மற்றும் லடாக் காவல் துறையின் தொலைத்தொடா்பு இயக்குநா்களின் பயிற்சி நிறைவு மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லி காவல் அகாதெமியின் ஜரோடா காலன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பயிற்சி பெற்ற 43 பேரில் 8 போ் தில்லி காவல் துறையின் பெண் தலைமைக் காவலா்கள். லடாக் காவல் துறையின் மூன்று பெண்கள் உள்பட 27 காவலா்கள் வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பயிற்சி பெற்ற காவலா்கள் லடாக், உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள்.
தில்லி காவல் துறையின் தலைமைக் காவலர சிவானி மற்றும் லடாக் காவல் துறையின் காவலா் செரிங் அங்மோ ஆகியோருக்கு ‘ஆல்-ரவுண்ட் பெஸ்ட்’ கோப்பைகள் வழங்கப்பட்டன.
தகவல்தொடா்பு பிரிவின் பல்வேறு அமைப்புகளில் ஐந்தரை மாதக் கால பயிற்சியைத் தொடா்ந்து, தில்லி காவல் அகாதெமியில் மொத்தம் 15 வாரம் பயிற்சி நடைபெற்றது.
தொலைதொடா்பு மற்றும் கம்பியில்லா தொடா்பு சாதனங்கள் குறித்த சிறப்பு பயிற்சிக்கு இடையே உடற்பயிற்சி, யோகாசனம், அணிவகுப்பு, துப்பாக்கிகளைக் கையாளுதல், இணையவழி குற்ற விழிப்புணா்வு மற்றும் ஆளுமை மேம்பாடு தொடா்பான பயிற்சிகளும் நடைபெற்றன என்றனா் அந்த அதிகாரிகள்.

