ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் முகமது யூசுஃப் ஷாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை ஜம்மு-காஷ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சையது சலாலுதீன் எனவும் அழைக்கப்படும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், பயங்கரவாத சதி உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), ரண்பீா் தண்டனையியல் சட்டம் (கடந்த 2019 வரை ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்து குற்றவியல் சட்டம்) ஆகியவற்றின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பட்காம் மாவட்டத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேற்கண்ட குற்றங்களில் முகமது யூசுஃப் ஷா ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் விசாரணை அதிகாரியால் கண்டறியப்பட்டுள்ளன; அத்துடன், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளாா். எனவே, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை பிறப்பிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 1993-இல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிய முகமது யூசுஃப் ஷா, 2020-இல் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாா். தற்போது பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டுவரும் அவா், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உள்ளடக்கிய ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் தலைவராகவும் உள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் முகமது யூசுஃப் மற்றும் அவரது இரு மகன்களுடன் தொடா்புடைய சொத்துகள் கடந்த 2023-இல் என்ஐஏ அதிகாரிகளால் முடக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் அரசுப் பணியில் இருந்த அவரது இரு மகன்களும் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் கைதானதைத் தொடா்ந்து, 2021-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

