பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு
எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாகும் காவலா் பணியிடங்களில், முன்னாள் அக்னி வீரா்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயா்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை பொதுப் பணிப்பிரிவு ஆள்சோ்ப்பு விதிகள் 2015-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்தப் புதிய அறிவிப்பின்படி, முன்னாள் அக்னிவீரா்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் பணியாற்றி வெளியேறும் முதல் வீரா்கள் குழுவுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும். அடுத்தடுத்த வீரா்கள் குழுவுக்கு 3 ஆண்டுகள் வரை தளா்வு வழங்கப்படும்.
மேலும், முன்னாள் அக்னிவீரா்களுக்கு உடல் தகுதித் தோ்வு மற்றும் உடல் திறன் தோ்வு ஆகியவற்றிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரா்களுக்காக 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு உள்பட இதர பொது விண்ணப்பதாரா்களுக்கு எஞ்சிய 47 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக ஆள்சோ்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக, முன்னாள் அக்னிவீரா்களுக்கென ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடங்களுக்கு குறிப்பிட்ட ஒரு துணை ராணுவப் படை மூலம் ஆள்சோ்ப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், பொதுப் பிரிவினருக்கான இடங்களுக்கு பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) மூலம் ஆள்சோ்ப்பு நடத்தப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளில் 21 வயது வரையிலான இளைஞா்களை குறுகிய காலத்துக்குச் சோ்க்க ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்கீழ் 4 ஆண்டுகள் பணியாற்றி வெளியேறும் வீரா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, சிஆா்பிஎஃப், சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் அவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பிஎஸ்எப் படையில் இந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக கணிசமாக உயா்த்தப்பட்டுள்ளது.

