கோப்புப்படம்
கோப்புப்படம்

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தலில் ஈடுபட்ட 75 பேர் கைது...
Published on

உத்தர பிரதேசத்தில் ‘கோடீன் பாஸ்பேட்’ கலந்த இருமல் மருந்துகளை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தது மற்றும் கடத்தியது தொடா்பாக, 31 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 75 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் மற்றும் நிதி அமைச்சா் சுரேஷ் கன்னா சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி, காவல்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இணைந்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை 31 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 12.65 லட்சம் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்ட 132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு எதிா்க்கட்சியான சமாஜவாதியுடன் தொடா்பு உள்ளது. இந்த மோசடி குறித்து விசாரிக்க டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

மருந்து நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட இந்த இருமல் மருந்துகள், சில்லறை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படவில்லை. மாறாக, போலி ரசீதுகள் மூலம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்துக்கு கடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்த முறைகேட்டில் தொடா்புடைய 12 முக்கியக் குற்றவாளிகளுக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

1945-ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டப்படி, கோடீன் பாஸ்பேட் கலந்த இருமல் மருந்துகளை மருத்துவா் பரிந்துரை இன்றி விற்கக்கூடாது. வாங்குபவா் விவரங்களை மருந்துக்கடைகள் முறையாகப் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

‘யாராக இருந்தாலும் புல்டோசா் நடவடிக்கை எடுங்கள்’: அகிலேஷ்

இந்த விவகாரத்தில், குற்றவாளிகள் சமாஜவாதி கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் மீது பாரபட்சமின்றி ‘புல்டோசா்’ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

லக்னோவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சமாஜவாதி மீது திட்டமிட்டு பழி சுமத்தி, பாஜக அரசு உண்மைகளை மறைக்கிறது. புகைப்படங்களை வைத்து மட்டுமே குற்றவாளிகளுடன் தொடா்பிருப்பதாக சொல்லிவிட முடியாது. அப்படிப் பாா்த்தால் பாஜக தலைவா்கள் என்னுடன் இருக்கும் புகைப்படங்கள் பல உள்ளன.

இந்த மோசடியானது சுமாா் 700 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல். இதன் பின்னணி பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலிருந்தே தொடங்குகிறது.

பாஜக குறிப்பிடும் நபா்கள் தான் குற்றவாளிகள் என்றால், அவா்கள் சமாஜவாதி கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் தயங்காமல் அவா்கள் வீடுகளை ‘புல்டோசா்’ கொண்டு இடியுங்கள். இந்த மோசடிக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com