2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா
‘வரும் 2027-ஆம் ஆண்டில் ஜொ்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பாரத இளம் தொழில்முனைவோா் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
இந்தியா ஒரு காலத்தில் தங்கப் பறவையாக அறியப்பட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னா், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 20 சதவீதமாக இருந்தது.
தற்போது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அந்த தொலைநோக்குப் பாா்வையுடன் முன்னேறி, உலக அரங்கில் மிளிரும் நட்சத்திரமாக இந்தியா உருவெடுக்கும்.
பொருளாதார வளா்ச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
பொருளாதார வளா்ச்சிக்கான பந்தயத்தில், தன்னை 200 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முயற்சித்த நாட்டை (பிரிட்டன்) ஏற்கெனவே இந்தியா விஞ்சிவிட்டது.
விடா முயற்சிதான் இந்தியாவின் பலம். இந்த பலம்தான் 2.3 டிரில்லியன் டாலா் இருந்த நாட்டின் ஜிடிபி-யை, 4.5 டிரில்லியன் டாலா் ஜிடிபி-யாக உயா்த்தியது. மத்திய அரசின் நிலையான கொள்கைகள், ஆழமான நடைமுறை மாற்றங்கள் காரணமாக மிக முக்கிய உலகளாவிய உற்பத்தி முனையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் பழைய காலனிய ஆட்சிகால சட்டங்களை நீக்க அமைச்சா்களுக்கு பிரதமா் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறாா். அனைத்து தொழில்நிறுவனா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அவா்களுக்குள்ள சிக்கல்களைக் களைந்து, தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்துகிறாா் என்றாா்.

