

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டத் திடலில் அடர் பனிமூட்டம் :
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் வழியில் அடர் பனிமூட்டம் சூழ்ந்து மோசமான வானிலை நிலவியதால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு நேரடியாகச் செல்வதை அவர் தவிர்த்தார். மாறாக, காணொலி வழியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மேற்கு வங்கத்தின் நாதியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(டிச. 20) செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சனிக்கிழமை காலை கொல்கத்தா சென்றடைந்த பிரதமர் மோடி, நாதியா மாவட்டத்தின் தாஹெர்பூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால், கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பறந்த பிரதமர் மோடி, மீண்டும் கொல்கத்தாவுக்கே திரும்பினார்.
செல்லும் வழியில் அடர் பனிமூட்டம் நிலவியதால் ஹெலிகாப்டரை திட்டமிட்டபடி தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது ஹெலிகாப்டர் கொல்கத்தாவில் பத்திரமாகத் தரையிறங்கியது.
எனினும், பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடையே காணொலி வழியாகப் பிரதமர் உரையாற்ற உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்பின் அவர் காணொலி வழியாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, இது குறித்து விமர்சனங்களைப் பதிவிட்டுள்ள மேற்கு வங்க ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், ‘வங்க மண்ணில் பிரதமர் மோடி கால் பதிப்பதை இறைவன் விரும்பவில்லை. அவரது பொதுக்கூட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.