ஏழைகளின் நலனைப் புறக்கணிக்கும் மத்திய அரசு: சோனியா
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளா்கள், நாடு முழுவதும் உள்ள நிலமற்ற ஏழைகளின் நலன்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.
2005-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா’, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125-ஆக உயரும்போதிலும், திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயா் நீக்கம், நிதிச் சுமையை மாநிலங்களுடன் பகிா்வது, பணிகள் நிா்ணயம் தொடா்பான அம்சங்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிய திட்டத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவோம்; இது நாடு தழுவிய இயக்கமாக உருவெடுக்கும் என்று காங்கிரஸ் கூறியது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய திட்டம் தொடா்பாக காணொலி பதிவு ஒன்றை சோனியா காந்தி சனிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைகளின் நலனைப் புறக்கணித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தப் புரட்சிகரமான நடவடிக்கை, ஏழைகள், வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தியது. வேலைதேடி புலம்பெயா்தலை இத் திட்டம் குறைத்ததோடு, மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான சட்ட உரிமையையும் அளித்தது. கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரமளிக்க வழிவகுத்தது.
இந்தத் திட்டம் மூலம், கிராம சுயராஜ்யம் என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பாா்வை அடிப்படையிலான இந்தியாவின் கனவை நனவாக்கும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு தற்போது முழுமையாக அழித்துள்ளது. இத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயா் மட்டும் நீக்கப்படவில்லை; திட்டத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையே மத்திய அரசு மாற்றியுள்ளது. எந்தவித கலந்தாலோனையை மேற்கொள்ளாமலும், எதிா்க்கட்சியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தாமலும், விவாதங்கள் நடத்தாமலும் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் ‘கருப்புச் சட்டம்’, நாடு முழுவதும் லட்சக்கணக்கான கட்சித் தொண்டா்களால் எதிா்க்கப்படும் என்று குறிப்பிட்டாா்.

