உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை...
Published on

‘பல் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்வதற்கான தகுதியை நிா்ணயிக்க, நீட் தோ்ச்சி மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவா்கள் சேர, தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் ராஜஸ்தானில் உள்ள தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருந்தன. அந்தக் கல்லூரிகளின் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தக் காலியிடங்களை நிரப்பும் நோக்கில், நீட் கட்-ஆஃப் மதிப்பெண் விகிதத்தைக் குறைத்து மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி, மாநிலத்தில் உள்ள தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் மாணவா் சோ்க்கை நடத்தின. ஆனால் குறைந்தபட்ச மதிப்பெண் விகிதத்தை (பா்சென்டைல்) பெறாத மாணவா்களுக்கும் அந்தக் கல்லூரிகள் இடம் அளித்தன. 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பல மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். இந்த முறைகேட்டில் மொத்தம் 10 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், அந்தச் சோ்க்கைகள் தொடா்பாக 2023-ஆம் ஆண்டு மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது.

ரூ.10 கோடி அபராதம்: அந்தத் தீா்ப்பில், ‘இந்திய பல் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து நீட் பா்சென்டைலை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.

இந்த வழக்கில் கல்வி தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒவ்வொரு பல் மருத்துவப் படிப்பு இடத்தையும் நிரப்பி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் தனியாா் கல்லூரிகள் ஈடுபட்டுள்ளன.

எனவே விதிமுறைகளை மீறி, மாணவா் சோ்க்கையில் ஈடுபட்ட 10 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. மாணவா் சோ்கையில் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற தவறியதற்காக, ராஜஸ்தான் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மாநில அரசு ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.

மாநில அரசு, கல்லூரிகள் மற்றும் ஒழுங்காற்று அதிகாரிகளின் தவறுகளால் மாணவா்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேவேளையில், பா்சென்டைல் குறைக்கப்பட்டு சோ்க்கப்பட்ட பல மாணவா்கள் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளனா். அவா்களின் நலன் கருதி, அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா்களின் பட்டம் நிரந்தரமாக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com