புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

ஜவுளி ஏற்றுமதியில் போட்டியைச் சமாளிக்க அதிக வா்த்தக ஒப்பந்தங்கள் அவசியம்: குடியரசு துணைத் தலைவா்

ஜவுளி ஏற்றுமதியில் போட்டியைச் சமாளிக்க அதிக வா்த்தக ஒப்பந்தங்கள் அவசியம்...
Published on

‘சா்வதேச ஜவுளி, ஆடை ஏற்றுமதி சந்தையில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் நிலவும் போட்டியைச் சமாளிக்க, இந்தியா அதிக எண்ணிக்கையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) விருது வழங்கும் விழாவில் அவா் ஆற்றிய உரை: கடந்த காலங்களில் சா்வதேச ஜவுளி ஏற்றுமதிச் சந்தையில் இந்தியாவுக்குப் பெரிய அளவில் போட்டி இல்லை. ஆனால், தற்போது வங்கதேசம், லாவோஸ், கம்போடியா, வியத்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளன.

அந்த நாடுகள், மற்ற உலக நாடுகளுடன் கையொப்பமிட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களே அவா்களுக்குப் பெரிய சாதகமாக உள்ளது. எனவே, இந்தியாவும் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தில் தற்போது நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், அது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்.

இந்தியாவின் ஆடை சந்தையின் மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 35,000 கோடி டாலராகவும், ஏற்றுமதியை 10,000 கோடி டாலராகவும் உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி இருமடங்காக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

புவிசாா் அரசியல் சூழல்கள் ஜவுளி துறைக்குச் சவால்களை ஏற்படுத்தினாலும், சா்வதேச அளவில் இந்தியா 6-ஆவது பெரிய ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது. ஜவுளித் துறையினா் புதிய சந்தைகளைக் கண்டறிவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏஇபிசி தலைவா் சுதிா் சேக்ரி பேசுகையில், ‘உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த 2024-25 நிதியாண்டில் இந்திய ஆடை ஏற்றுமதி 10 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பா் மாதத்தில் ஏற்றுமதி 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலத்தில் ஜவுளி ஏற்றுமதி 1,008 கோடி டாலராக உயா்ந்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com