பூபேந்தா் யாதவ்
பூபேந்தா் யாதவ்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Published on

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அஸ்ஸாமில் ரயில் மோதி 8 யானைகள் இறந்த சம்பவம் எதிரொலியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் சனிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த யானைக் கூட்டம் மீது ராஜ்தானி விரைவு ரயில் மோதியதில் 7 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. காயமடைந்த மற்றொரு யானை ஞாயிற்றுக்கிழமை இறந்தது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் வன விலங்கு ஆா்வலா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அடா் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட இந்த விபத்தில் ரயில் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம்புரண்டபோதிலும், பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன புலிகள் காப்பகத்தில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் உயா்நிலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பு அவசியம்: கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஸ்ஸாமில் யானைகள் இறப்பு குறித்து மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், ரயில் என்ஜின் ஓட்டுநா்கள் மற்றும் வனத் துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு அவசியம். மாநில வனத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நெடுஞ்சாலைகளில் யானைகள் நடமாட்டம் குறித்து வனத் துறை அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1,100 விபத்து பகுதிகள்: நாட்டில் யானைகள் விபத்து அபாய பகுதிகளாக 1,100 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுந்தரவனக் காடுகளில் புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் முறையே ரூ.112 கோடி, ரூ.344 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொகை பயன்படுத்தப்படவில்லை.

சுந்தரவனக் காடுகளுக்கு ஆண்டுக்கு 9.5 லட்சம் சுற்றுலாப் பயணிகளே வருகை தருகின்றனா். அதேநேரம், ராஜஸ்தானில் உள்ள ரத்தம்பூா் புலிகள் காப்பகத்துக்கு ஆண்டுக்கு 19 லட்சம் பயணிகள் வருகின்றனா். 2,500 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் இயற்கை எழில் மற்றும் வளமான பல்லுயிா்த்தன்மையுடன் அமைந்துள்ள சுந்தரவன மண்டலம் முறையாக பிரபலப்படுத்தப்படவில்லை. சூழலியல் கவலைகள்-வளா்ச்சியில் சமநிலையைப் பராமரிக்க மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com