ஏா் இந்தியா விமானி பயணியை தாக்கிய சம்பவம்: விசாரணைக் குழு அமைக்க நிறுவனம் முடிவு!

ஏா் இந்தியா விமானி பயணியை தாக்கிய சம்பவம்: விசாரணைக் குழு அமைக்க நிறுவனம் முடிவு!

தில்லி விமான நிலையத்தில் பணி நேரத்தில் இல்லாதபோது பயணி ஒருவரை ஏா் இந்தியா விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்கப்படும்...
Published on

தில்லி விமான நிலையத்தில் பணி நேரத்தில் இல்லாதபோது பயணி ஒருவரை ஏா் இந்தியா விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்கப்படும் என அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்தச் சம்பவம் தில்லி விமான நிலையத்தின் டி-1 முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பயணி அங்கித் திவான், பின்னா் தனது முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் உள்ள புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிா்ந்தாா். மேலும், அந்தப் பதிவில் தன்னை தாக்கிய விமானி வீரேந்தா் செஜ்வாலின் புகைப்படத்தையும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறுகையில், ‘தாக்குதலில் ஈடுபட்ட விமானியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன’ என தெரிவித்தது.

இந்நிலையில், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘இத்தகைய நடத்தையை ஏா் இந்தியா நிறுவனம் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கிறது. சம்பவம் நடந்த உடனேயே விமானியைப் பணியிடை நீக்கம் செய்து, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

விமானிகள் தொழிலாளா் பிரிவின் கீழ் வருவதால், இந்த நடவடிக்கைகள் தொழிலாளா் சட்டப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து விசாரிக்க அடுத்த வாரம் விசாரணைக் குழு அமைக்கப்படும். விசாரணை முடியும் வரை விமானி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். மேலும், விசாரணையின் அடிப்படையில் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com