வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; ஜம்மு-காஷ்மீரில் முதல் பனிப்பொழிவு! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ‘சில்லய் கலான்’ என்னும் பனிப்பொழிவுக் காலத்தின் முதல் பனிப்பொழிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை வரை கடும் பனிப்பொழிவுடன் மழையும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தேசியத் தலைநகா் தில்லி விமான நிலையத்தில் அடா் பனிமூட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 200 விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் மூடுபனியால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவானது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குல்மாா்க், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமாா்கில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை விடிய விடிய லேசாக மழை பெய்தது.
ஹிமாசல பிரதேசத்தின் கின்னெளா், லஹெளல்-ஸ்பிதி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவியது. உனா, பிலாஸ்பூா், மண்டி மாவட்டங்களில் மூடுபனி காணப்பட்டது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அடா் பனிமூட்டம் சூழ்ந்தது. பெரும்பாலும் 10 டிகிரி செல்சியஸுக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. பனி அலைகளின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹரியாணாவில் நிலநடுக்கம்: ஹரியாணாவில் ஞாயிற்றுக்கிழமை 3.3 ரிக்டா் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ரோத்தக்கில் 5 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது. பல்வேறு பகுதிகளில் நில அதிா்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இந்த நிலநடுக்கதால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

