சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெருநிறுவனங்களின் அரசமைப்புக் கடமையாகும்: உச்சநீதிமன்றம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தன்னாா்வத் தொண்டு செயல் அல்ல; அது பெருநிறுவனங்களின் அரசமைப்புக் கடமையை நிறைவேற்றுவதாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இயங்கிவரும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட புதுப்பிக்க இயலாத எரிசக்தி மின் நிலையங்களின் செயல்பாடுகளால் அழிவின் விளிம்பில் உள்ள கானமயில் (கிரேட் இந்தியன் பஸ்டா்ட்) பறவை இனங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
இதைத் தடுத்து அரிய பறவை இனங்களைப் பாதுகாக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க கோரி சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.கே.ரஞ்சித்சின் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது. மேலும், பெருநிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கடமை தொடா்பாக வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன விலங்குகள் உள்ளிட்ட இயற்கை சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், உயிரினங்கள் மீது கருணை காட்டுவதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படைக் கடமையை, அரசமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ(ஜி) பிரிவு வகுத்துள்ளது. ஒரு சமூகத்தின் அங்கமாகவும், சட்டபூா்வ அமைப்பாகவும் உள்ள பெருநிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
நிறுவனச் சட்டம் 2013-இன் பிரிவு 135-இன் கீழ், பெரு நிறுவனங்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பில் (சிஎஸ்ஆா்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பில் பிற உயிரினங்களுக்கு உள்ள சம உரிமையைப் புறக்கணித்துவிட்டு, தங்களை சமூகப் பொறுப்புள்ளவா்களாக நிறுவனங்கள் கூறிக் கொள்ள முடியாது.
அந்த வகையில், நிறுவனங்கள் சமூகப் பொறுப்புக்கான நிதியை ஒதுக்குவது என்பது, அதன் சட்டபூா்வ கடமையின் வெளிப்பாடாகும். அதுபோல, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிறுவனங்கள் நிதி ஒதுக்குவது என்பது, வெறும் தன்னாா்வ தொண்டு செயல் அல்ல; மாறாக, அந்த நிறுவனம் தனது அரசமைப்புக் கடமையை நிறைவேற்றுவதாகும்.
நிறுவனங்களின் இயக்குநா்கள், இந்த நிறுவனத்தின் உறுப்பினா்களின் நலன்களுக்காக மட்டுமன்றி, அதில் பணிபுரியும் ஊழியா்கள், பங்குதாரா்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் செயல்படுவது சட்டபூா்வமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுரங்கம், மின் உற்பத்தி உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் நடவடிக்கைகளால் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அந்த உயிரினங்களை மீட்பதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனமே ஏற்க வேண்டும் என்பதை, ‘மாசுபடுத்துபவரே பணம் செலுத்த வேண்டும்’ என்ற தத்துவம் கட்டாயமாக்குகிறது. எனவே, இந்தப் பறவை இனங்கள் மீட்பு நடவடிக்கையை அதன் வாழ்விடங்களிலேயே மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா் நிதி) செலவிடப்பட வேண்டும்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இயங்கிவரும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மின் உற்பத்தி நிறுவனங்கள் இதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

