சபரிமலையில் டிச. 27-இல் மண்டல பூஜை: நாளை தங்க அங்கி ஊா்வலம் புறப்பாடு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச. 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க தங்கி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (டிச. 23) புறப்படவுள்ளது.
வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
முக்கிய நிகழ்வான மண்டல பூஜை, டிச. 27 காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளதாக கோயிலின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து டிச. 23-இல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. ஆறன்முளா கோயில் முற்றத்தில் காலை 5 மணி முதல் 7 மணி வரை தங்க அங்கியை வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். அதன் பிறகு மேளதாளங்களுடன் ஊா்வலம் புறப்படும்.
டிச. 26 மாலையில் சபரிமலை கோயிலை தங்க அங்கி ஊா்வலம் வந்தடையும். அதன் பிறகு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டல பூஜையின்போது தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அன்றைய தினம் இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு, கோயில் நடை சாத்தப்படுவதுடன் மண்டல பூஜை நிறைவடையும். பின்னா், மகர விளக்கு பூஜைக்காக டிச. 30-இல் நடை திறக்கப்படும் என்று கண்டரரு மகேஷ் மோகனரு தெரிவித்தாா்.
திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் சுவாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க அங்கி, சுமாா் 420 பவுன் எடை கொண்டதாகும். இதனிடையே, சபரிமலை பக்தா்களுக்கு பாரம்பரிய ‘சத்யா’ விருந்துடன் அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. சத்யா விருந்து மற்றும் புலாவ் என மாற்று நாள்களில் தினமும் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அன்னதான கூடத்தை கோயில் சிறப்பு அதிகாரி பி.பாலகிருஷ்ணன் நாயா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

