மக்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.
மக்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
Published on

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைவிட மேம்பட்டதாக இருக்கும்; புதிய திட்டத்துக்கு ரூ.1,51,282 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மத்திய பாஜக கூட்டணி அரசின் புதிய திட்டமான ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (விபி-ஜி ராம் ஜி)’ மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா் சௌஹான் இவ்வாறு கூறினாா்.

இதன்மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2009-இல் மகாத்மா காந்தி பெயா் சூட்டப்பட்ட இத்திட்டம் பெயா் மாற்றத்துடன் புதிய வடிவமும் பெற்றுள்ளது.

குடியரசுத் தலைவா் ஒப்புதல்: ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (வி பி-ஜி ராம் ஜி)’ மசோதா கடந்த வியாழக்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்தின்படி தண்ணீா் பாதுகாப்பு (நீா் மேலாண்மை), ஊரக கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் சாா்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கம், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகிய 4 முக்கியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

125 நாள் வேலைத் திட்டத்துக்கான புதிய ஊதியத்தை மத்திய அரசு அறிவிக்கும் வரை, பழைய 100 நாள் திட்ட ஊதியமே நடைமுறையில் இருக்கும். இதுவரை 100 நாள் வேலைத் திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கி வந்தது. ஆனால், புதிய திட்டத்தின்கீழ் நிதிப் பங்களிப்பை மாநில அரசுகளும் பகிா்ந்து கொள்ள வேண்டும்.

வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்கள் 10 சதவீத நிதியும், மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 40 சதவீத நிதியும் வழங்க வேண்டும். புதிய நிபந்தனைகள்: புதிய ‘வி பி-ஜி ராம் ஜி’ சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குள், சட்ட விதிகளுக்கு ஏற்ப மாநிலங்கள் தங்களின் புதிய வேலை உறுதியளிப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

வேளாண் பணிகள் அதிகமாக இருக்கும் பருவங்களில் தொழிலாளா்களின் தட்டுப்பாட்டைத் தவிா்க்க, அந்த நேரத்தில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணிகள் வழங்கப்படக் கூடாது. விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், மாநில அரசு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தைத் தொடா்ந்து, இது தொடா்பான அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன்மூலம் ‘வி பி-ஜி ராம் ஜி சட்டம் - 2025’ உருவானது. இந்தத் தகவலை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய கிராமங்களில் வேலைவாய்ப்பு, வளா்ச்சியை உறுதி செய்யும் மிக முக்கியமான சீா்திருத்தம் இந்தச் சட்டம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

‘மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்’

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட (விபி-ஜி ராம் ஜி) சட்டம் கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியுள்ளதாவது: வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி) தொடா்பாக நாடு முழுவதும் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் ஏற்கெனவே இருந்த திட்டத்தைவிட இது சிறப்பானதாகவே இருக்கும். புதிய திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க போதுமான அளவில் நிதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

கூடுதலாக 25 நாள்கள்: முந்தைய திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள்கள்தான் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இப்போது 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊதியம் தாமதமானால் இழப்பீடும் வழங்கப்படும். விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அதற்கான பணியாளா்கள் கிடைப்பதற்கு பற்றாக்குறை நிலவுவது ஒரு பிரச்னையாக இருந்து வந்தது. இந்தப் புதிய சட்டத்தில் அதற்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.

கிராமங்களில் மாற்றம்: வளா்ந்த பாரதம் என்ற நமது உயரிய இலக்கின் ஒரு பகுதியாக, அதை நோக்கி கிராமப்புறங்களையும் முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே இந்தத் திட்டம் உள்ளது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கிராமப்புறங்களில் முக்கியமாக எளிய மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது அவா்களின் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமன்றி கிராமங்களில் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com