

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஒப்புதல்: வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிச., 21) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தாா்.
புதிய மசோதாவின்படி, ஓராண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கும் இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதோடுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலுள்ள அரசியல் கட்சிகளும் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் கிராமப்புறத்திலுள்ள மக்கள் 125 நாள்கள் பணிபுரிவதை இச்சட்டம் உறுதி செய்யும் என்றும், இதனால் கிராமப்புற வீடுகளுக்கான வருவாயும் அதிகரிக்கும் என ஊரக வளர்ச்சித் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
நவீன மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி மூலம் தன்னிறைவு பெற்ற கிராமப்புற பாரதம், வளமான வாழ்க்கைக்கான அடித்தளம் அமைக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.