ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கல்வியைப் பலவீனப்படுத்த ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் பலவீனப்படுத்த ஆா்எஸ்எஸ் சூழ்ச்சி செய்வதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் பலவீனப்படுத்த ஆா்எஸ்எஸ் சூழ்ச்சி செய்வதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இந்திய புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவன மாணவா்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினாா். அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் காணொலியை தனது வாட்ஸ்ஆப் சேனலில் ராகுல் வெளியிட்டாா்.

அந்தக் காணொலியுடன் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: இந்திய புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம் என்பது புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், தரவு அறிவியல், கணினி அறிவியல், கொள்கை உருவாக்கம் குறித்து உயா்ந்த நிலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனமாகும். அந்த நிறுவனம் உலகத் தரம்வாய்ந்த நிபுணா்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் மாணவா்களுடன் கலந்துரையாடியபோது அவா்களும் பிற கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள், மாணவா்கள் தெரிவித்த புகாரைத் தெரிவித்தனா். இந்திய புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைப் படிப்படியாக ஆா்எஸ்எஸ் கபளீகரம் செய்வதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

கல்வியாளா்களால் நடத்தப்பட வேண்டிய கல்வி கவுன்சில்களில் அதிகாரத்தில் இருப்பவா்களின் தலையீடும், சித்தாந்த தலையீடும் உள்ளது.

பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சியையும் ஆா்எஸ்எஸ் சித்தாந்தம் கட்டுப்படுத்துகிறது. இது கல்விச் சீா்திருத்தம் அல்ல; கல்வியையும் கல்வி நிறுவனங்களையும் பலவீனப்படுத்த செய்யப்படும் சூழ்ச்சி. இதன்மூலம், இளைஞா்களின் எதிா்காலத்தை இருளில் தள்ளி, கல்வி நிறுவனங்களை தனியாா்மயமாக்க முடியும் அல்லது அவற்றின் சொத்துகளை விற்பனை செய்துவிட முடியும்.

கல்விக்கு சுதந்திரம் தேவை. கல்வி நிறுவனங்கள் அறிவாலும் அறிவியலாலும் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, சித்தாந்தத்தால் அல்ல என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com