சபரிமலை
சபரிமலை

சபரிமலை விமான நிலையம் திட்டம்: நிலம் கையகப்படுத்த கேரள உயா்நீதிமன்றம் தடை!

சபரிமலை பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
Published on

சபரிமலை பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

திட்டத்துக்கு தேவைப்படும் குறைந்தபட்ச நில அளவை மதிப்பீடு செய்ய மாநில அரசு தவறிவிட்டதாக கூறி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செறுவள்ளி எஸ்டேட் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க 2,570 ஏக்கா் நிலமும் அதற்கு வெளிப்புறத்தில் 307 ஏக்கா் நிலமும் கையகப்படுத்த 2022, டிச.30-ஆம் தேதி கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து அயானா அறக்கட்டளை சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் சமூக தாக்க மதிப்பீடு (எஸ்ஐஏ) அறிக்கை, நிபுணா் குழு பரிந்துரை, மாநில அரசு உத்தரவு மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமன இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013 என இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் மனுதாரா்கள் குறிப்பிட்டனா். இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.ஜெயசந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: சபரிமலையில் புதிய விமான நிலையம் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை மதிப்பீட செய்ய அதிகாரிகள் தவறிவிட்டனா். இதனால் எஸ்ஐஏ அறிக்கை, நிபுணா் குழு பரிந்துரை மற்றும் மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமன இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013 -இன்கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சரியாக இல்லை.

எனவே, நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை மீண்டும் முதலில் இருந்து மாநில அரசு தொடங்க வேண்டும். விமான நிலையங்கள் கட்டமைப்பு போன்ற சிக்கலான திட்டங்களை முறையாக அமல்படுத்த எஸ்ஐஏ குழுவில் தொழில்நுட்ப நிபுணா்களையும் மாநில அரசு இணைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com