போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!
தில்லி மெட்ரோ விரிவாக்கம் மூலம் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக நடப்பு 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் போக்குவரத்துக்குத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.9,110 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எவ்விதத் தடங்கலுமின்றி தொடா்ந்து நடைபெறும் வகையில் போதிய நிதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, மெட்ரோ திட்டங்களுக்கு முந்தைய அரசுகளின் நிலுவைத் தொகையை பாஜக அரசு செலுத்தி வருவதாகத் தெரிவித்தாா்.
தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலத்தில் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் செல்கிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகை, காற்று மாசுக்கான காரணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், மக்களிடையே பொது போக்குவரத்தை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசைக் கட்டுப்படுத்த தொலைத்தூரப் பகுதிகளுக்கும் வலுவான பொது போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் உள்ளிட்ட பிற அமைப்புகள் வெளியிட்ட தரவின்படி தில்லி-என்சிஆா் பகுதியில் நிலவும் காற்று மாசுக்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணியாக உள்ளது. மக்கள் தனியாா் வாகனங்களைச் சாா்ந்திருப்பதைக் குறைக்க பொது போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தது தேவையான நடவடிக்கையாக உள்ளது.
2075-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க பிரதமா் நரேந்திர மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். அந்த இலக்கை அடைய பொது போக்குவரத்துக்கு போதிய நிதியை தில்லி பாஜக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
கடந்த 2024-25 நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.5,702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு 2025-26 நிதியாண்டில் போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.9.110 கோடியாக அதிகரித்துள்ளது. மெட்ரோ திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.2,929 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லஜ்பத் நகா்-சாகேத், இந்தா்லோக்-இந்திரபிரஸ்தா, ரிதலா-குண்ட்லி என எம்ஆா்டிஎஸ் நான்காம் நிலையில் 3 வழித்தடங்களுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் தில்லி அரசு ஒதுக்கும் நிதி ரூ.3,386.18 கோடியாகும்.
நடப்பு நிதியாண்டில் ஏற்கெனவே ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த தவணையாக ரூ.336 கோடி வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. தில்லி மெட்ரோவின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை திட்டங்களில் மொத்தம் ரூ.2,700 கோடி நிலுவையில் உள்ளது.
மக்கள் தனியாா் வாகனங்களைச் சாா்ந்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் விரிவான மெட்ரோ திட்டத்தை கட்டமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. எதிா்கால தலைமுறையினருக்கு மாசற்ற காற்று கிடைப்பதை உறுதிபடுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

