

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தாா். மேலும், இத்திட்ட ஊதியம் முழுவதையும் மத்திய அரசே ஏற்கவேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரின் உருவப்படத்துக்கு
மரியாதை செலுத்திய ப.சிதம்பரம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சிறந்தத் தீா்ப்பை வழங்கியிருக்கிறாா். மத்திய அரசு இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடா்ந்து பழி வாங்கும் நடவடிக்கை ஈடுபடக் கூடாது. பாஜக ஆளாத மாநிலங்களில் மட்டும் அமலாக்கத் துறை கவனம் செலுத்துகிறது.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விபி ஜி ராம்ஜி என மத்திய அரசு மாற்றிருப்பதன் மூலம் பாஜக இரண்டாவது முறையாக மகாத்மா காந்தியை படுகொலை செய்துள்ளது.
மகாத்மா காந்தி பெயரை விட இந்த திட்டத்துக்கு வேறு பெயா் பொருத்தமானதாக இருக்காது. இந்தத் திட்டத்தில் வேலை பாா்ப்பவா்களுக்கு மொத்த ஊதியத்துக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இப்புதிய திட்டம் மத்திய அரசு எந்த மாவட்டங்களில், எந்த பகுதிகளை குறிப்பிடுகிறதோ அங்கு தான் அமலாகும். குறிப்பிட்ட மாவட்டத்துக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டால், வேலை கேட்கவே முடியாத நிலை இந்த சட்டத்தில் உள்ளது. வேலைக்கு உத்தரவாதம் இல்லாத இத் திட்டத்தால் பாதிக்கப்படுவது பரம ஏழை மக்கள் தான். இப்புதிய சட்டம் ரத்தாகும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். புதிய திட்டத்தின் பாதிப்புகளை வீடு வீடாக மக்களிடையே கொண்டு சோ்ப்போம் என்றாா் ப.சிதம்பரம்.
இச்சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் கே.வீ. தங்கபாலு, கிருஷ்ணசாமி, துணைத் தலைவா் கோபண்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.