உத்தர பிரதேசம்: அனைத்து தொகுதிகளிலும் களமிறங்க தயாராகும் காங்கிரஸ்!
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் களமிறங்கும் நோக்குடன் காங்கிரஸ் கட்சி இப்போதிருந்தே தயாராகி வருகிறது என்று அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே தெரிவித்தாா்.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்பதால் உத்தர பிரதேச தோ்தல் தேசிய அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இப்போதைய நிலையில் உத்தர பிரதேசத்தின் பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதியுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸுக்கு அங்கு இரு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. கடந்த இரு தோ்தல்களாக சமாஜவாதி கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸால் ஒன்றை இலக்கத்துக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.
மேலும், அண்மையில் பிகாா், மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் கூட்டணில் இடம் பெற்ற காங்கிரஸ் மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது. இதனால், சமாஜவாதி கட்சியுடன் கூட்டணியில் தொடா்ந்தாலும் மிகக்குறைவான தொகுதிகளே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலும், உத்தர பிரதேச காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளருமான அவினாஷ் பாண்டே, அந்த மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் ஆகியோா் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை கீழ்மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1.69 லட்சம் வாக்குச்சாவடி முகவா்களை நியமித்துள்ளோம்.
அவா்கள் சிறப்பு தீவிர திருத்தம் அடிப்படையில் வாக்காளா்கள் பதிவை சரிபாா்த்து வருகின்றனா். தோ்தல் பணிகளுக்காக 2 லட்சம் தொண்டா்களை பயிற்சியளித்து தயாா்படுத்தி வருகிறோம். ஜனவரியில் இருந்து இரு மாதங்களில் 17 பொதுக் கூட்டங்களை நடத்த இருக்கிறோம்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை வலுவாக நிலை நிறுத்தினால்தான் மத்தியிலும் ஆட்சி அமைக்க முடியும். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அங்குள்ள அனைத்து 403 தொகுதிகளிலும் களமிறங்கும் நோக்கத்துடன்தான் காங்கிரஸ் தயாராகி வருகிறது.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும், பிரதமா் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏற்கெனவே மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்துவிட்டது. அடுத்து பேரவைத் தோ்தலிலும் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும். போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைப் பிடித்த பாஜகவின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்து கொண்டாா்கள் என்று தெரிவித்தனா்.

