உலகளாவிய கற்றல் மையமாக இந்தியா மாற நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்: சசி தரூா்
உலகளாவிய கற்றல் மையமாக இந்தியா மாறுவதற்கு நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிகாா் மாநிலம் நாளந்தாவில் நடைபெறும் இலக்கிய விழாவின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: உலகின் முன்னணி பல்கலைக்கழகம் எதுவும் இந்தியாவில் தற்போது இல்லை. உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் முதல் 200 இடங்களில் சில இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றாலும், முதல் 10 அல்லது 50 இடங்களில் எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை.
அதேவேளையில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. உலகளாவிய கற்றல் மையமாக இந்தியா மாறுவதற்கு நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.
உலக அளவில் இந்தியாவின் கல்வித் திறனில் தேசிய கல்விக் கொள்கை உடனடியாக ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை அதிகமாக மதிப்பிடுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தாா்.

