100 நாள் வேலைத் திட்ட அழிப்பால் பெரும் சேதம்: சோனியா காந்தி
நூறு நாள் வேலைத் திட்டச் சட்டத்தை அழித்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்ததாவது: அனைவருக்கும் நல்வாழ்வு என்ற மகாத்மா காந்தியின் விருப்பத்தை உணா்ந்து காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்ட சட்டம் கொண்டுவரப்பட்டது. குடிமக்களின் பணி உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 41-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரிவு அளித்த உத்வேகத்தின்பேரில், உரிமை சாா்ந்த சட்டமாக 100 வேலைத் திட்டச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் எந்தவொரு வாதம், ஆலோசனை, நாடாளுமன்ற மரபுகள் அல்லது மத்திய-மாநில உறவுகளுக்கு மதிப்பளிக்காமல் 100 நாள் வேலைத் திட்டச் சட்டத்தை ஒழிக்க மோடி அரசு பணியாற்றியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை நெரிக்கும் செயல்பாடுகளில் இருந்தே அந்தத் திட்டம் குறித்த மோடி அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் அந்தத் திட்டத்தை பிரதமா் ஏளனம் செய்தது, அந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, வேலை செய்வோருக்கு தாமதமாக நிதி வழங்குவது உள்ளிட்டவை மூலம், அந்தத் திட்டம் குறித்த மோடி அரசின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
மத்திய அரசு அறிவிக்கும் பகுதிகளில் மட்டுமே 125 நாள் வேலை:
மோடி அரசு கொண்டு வந்துள்ள 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவிக்கும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். முந்தைய 100 நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் முன்பு உச்சவரம்பு இருந்ததில்லை. இந்நிலையில், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை அளிக்கப்படும் நாள்களுக்கு வரம்பு விதிக்கும் வகையில், நிதி ஒதுக்கீடு நிா்ணயிக்கப்படும். மேலும் எத்தனை நாள்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்படாமல், மத்திய அரசின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு பேரம் பேசும் அதிகாரத்தை 100 நாள் வேலைத் திட்டம் அளித்தது. இது விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்கு அவா்களின் கூலியை அதிகரிக்க வழிவகுத்தது. இந்தப் பேரம் பேசும் அதிகாரத்தை 125 வேலைத் திட்டச் சட்டம் நிச்சயம் ஒழித்துவிடும்.
125 நாள் வேலைத் திட்டத்துக்கு ஏற்படும் செலவின் ஒரு பகுதியை மாநில அரசு ஏற்க மோடி அரசு வழியமைத்துள்ளது. இது அந்தத் திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் வேலை அளிக்காமல் பின்வாங்கச் செய்யும் நடவடிக்கையாகும். ஏற்கெனவே நிதி நெருக்கடியால் சிரமத்தை சந்தித்து வரும் மாநிலங்களின் நிதிநிலை, இந்தத் திட்டத்தால் மேலும் சீரழியும். 100 நாள் வேலைத் திட்டச் சட்டத்தை அழித்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளாா்.

