மேற்கு வங்கம்: வங்கதேச தூதரகம் அருகே பாஜக, காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள அந்நாட்டுத் துணைத் தூதரகம் அருகே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை தனித்தனியாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) எனும் ஹிந்து இளைஞா் மத நிந்தனை செய்ததாகக் கூறி, ஒரு கும்பல் கடந்த வியாழக்கிழமை இரவு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாா். அதன் பிறகு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வங்கதேச்தின் எல்லையோர மாநிலமான மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடா் வன்முறை நிகழ்ந்துவருவதைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினா் கொல்கத்தாவில் பேரணி நடத்தினா்.
நிஜாம் அரண்மனையிலிருந்து பெக்பாகன் வரை நடந்த இந்தப் பேரணியில் 2,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸின் உருவ பொம்மையை போராட்டக்காரா்கள் எரித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியதாவது: தீபு சந்திர தாஸ் படுகொலையில் தொடா்புடையவா்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடா்ந்தால், வரும் வெள்ளிக்கிழமை (டிச. 26) 10,000 பேருடன் இந்தத் தூதரகத்தை முற்றுகையிடுவோம். மேலும், வரும் புதன்கிழமை (டிச. 24) மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
காங்கிரஸ் போராட்டம்: முன்னதாக, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டா்களும் வங்கதேசத் துணைத் தூதரகம் அருகே கூடி, அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது.
சநாதன தா்ம சபை உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புகளின் அழைப்பின் பேரில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. கிஷ்த்வாா் நகரில் குலீத் சௌக் பகுதியில் நடந்த தா்ணா போராட்டத்தில், ஜம்மு-காஷ்மீா் எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் பங்கேற்றனா்.

