நீதிமன்றம்
நீதிமன்றம்

மேற்கு வங்க வக்ஃப் திருத்தச் சட்டப் போராட்டம்: தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய 13 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் நவம்பா் 11-ஆம் தேதி அந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அடுத்த நாள் காலை வரை நீடித்த போராட்டம், பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறியது. போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். ஜாஃப்ராபாதில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் ஹரகோபிந்த தாஸ் (72) மற்றும் அவரின் மகன் சந்தன் தாஸ் (42) இருவரும் கொல்லப்பட்டனா்.

இந்தக் கொலையில் தொடா்புடையதாக பலரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு ஜங்கிபூரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை வெளியானது. வழக்கில் 13 பேரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், அவா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

X
Dinamani
www.dinamani.com