

உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்யும் அளவுகளில் இல்லாத பானங்களையும் ஓஆர்எஸ் என்ற பெயரில் விற்பனை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்திருந்தது.
ஆனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎன்டிஎல் நுகர்வோர் சுகாதார இந்தியா நிறுவனத்தின் ரூ.155 கோடி மற்றும் ரூ.180 கோடி மதிப்புள்ள ஓஆர்எஸ் என அச்சிடப்பட்ட பானங்களை விற்பனை செய்து கொள்ள தில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி கடந்த நவம்பரில் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கும் அளவுகளில் சேர்மானம் செய்யப்படாத எந்தவொரு பானத்துக்கும் ஓஆர்எஸ் என்று பெயரிட்டு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தி, அதுபோன்ற பானங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ், ஓஆர்எஸ் மருந்துகளுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேல் நடத்திய சட்டப்போராட்டத்தின் காரணமாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அப்போது, இது மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்று அவர் பகிர்ந்திருந்தார். ஆனால், இந்த உத்தரவு வந்த ஒரு சில நாள்களில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓஆர்எஸ் என்பது என்ன?
கடந்த 1971ஆம் ஆண்டு வங்கதேச போரின்போது, டாக்டர் திலீப் என்பவர் கண்டறிந்ததே வாய்வழியாக அளிக்கப்படும் நீர்ச்சத்து பானம். முகாம்களில் இருந்தவர்களுக்கு காலரா ஏற்பட்டு அதிக மரணங்கள் நேரிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களைக் காக்கும் வகையில் இந்த பானம் தயாரிக்கப்பட்டது.
இதில் சோடியம் குளோரைடு, க்ளூக்கோஸ், பொட்டாசியம் குளோரைடு, டிரிசோடியம் சிட்ரேட் டிஹைட்ரேட் ஆகியவை குறிப்பிட்ட அளவுகளில் ஒரு லிட்டர் குடிநீரில் கலக்கப்படும்.
ஆனால், அண்மைக் காலமாக போலியான பானங்களுக்கு ஓஆர்எஸ் என்று பெயரிடப்பட்டு நீர்ச்சத்து தேவைப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த சர்க்கரை அளவை விட பத்து மடங்கு அதிகமாக கலந்திருக்கிறது. பொதுவாக 13 கிராம் இருக்க வேண்டிய சர்க்கரை, சில ஓஆர்எஸ் பானங்களில் 120 கிராம் வரை இருக்கிறது.
இதையெல்லாம் தெரிந்துகொண்டு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, சோதனை செய்து இந்த போலியான ஓஆர்எஸ் பானங்களுக்கு தடை விதிக்கவில்லை. ஒரு மருத்துவர் நடத்திய பல ஆண்டு கால சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு தடை விதித்திருந்தது.
இதற்கிடையே இந்த தடை உத்தரவுக்கு எதிராக ஜேஎன்டிஎல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நிறுவனத்திற்கு எதிரான உத்தரவுகளை நீதிமன்றம் நிறுத்தி வைப்பதோடு, தடையை அமல்படுத்துவதற்கு முன்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் முறையாக விசாரித்து முடிவு செய்ய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இருக்கும் பானங்களை விற்பனை செய்யவும், இதுபோலவே, புதிய பானங்களை தயாரித்து விற்பனை செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் விசாரணை நடத்திய பிறகு தடை உத்தரவு குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு முடிவு செய்யும், அதுவரை, அதன் தடை உத்தரவுகள் செயல்படுத்தப்படாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டதோடு, இது ஜேஎன்டிஎல் நிறுவனத்துக்கானது மட்டுமே என்றும் தடை உத்தரவு மற்ற உற்பத்தியாளர்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதையும் தெரிவித்திருக்கிறது.
எனவே, சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் மக்கள் இதுபோன்ற பானங்களின் விற்பனையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். பெற்றோர்கள்தான் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.