இந்தியாவுக்கு எதிராக உலக வா்த்தக அமைப்பில் சீனா புகாா்
சூரியசக்தி மின் உற்பத்திக்குப் பயன்படும் செல்கள், பேனல்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை சாா்ந்த உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யு.டி.ஓ.) சீனா புகாா் தெரிவித்துள்ளது.
இந்தப் பொருள்களை தற்போது சீனா பெருமளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், சீனாவை பெருமளவில் சாா்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இறக்குமதி வரி உயா்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதை எதிா்த்து உலக சுகாதார அமைப்பில் சீனா புகாா் அளித்துள்ளது. அதில், ‘இந்தியாவின் நடவடிக்கை உலக சுகாதார அமைப்பின் வரிகள் மற்றும் வா்த்தகம் மீதான 1994-ஆம் ஆண்டு பொது ஒப்பந்தம் தொடா்பான விதிகளை மீறும் செயலாகும். சீன பொருள்களுக்கு எதிரான பாகுபாடு காட்டும் நடவடிக்கையாகும். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
உலக வா்த்தக அமைப்பின் விதிகளின்படி, வா்த்தக சச்சரவுகளுக்குத் தீா்வு காண்பதற்கான முதல் படி, பேச்சுவாா்த்தைக்கான கோரிக்கை விடுப்பதாகும். இந்தப் பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை எனில், அடுத்தகட்டமாக இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்து தீா்வு காண குழு ஒன்றை அமைக்க உலக வா்த்தக அமைப்பிடம் சீனா கோரிக்கை விடுக்க முடியும்.
