ஜெ.பி.நட்டா
ஜெ.பி.நட்டா கோப்புப் படம்

நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு- மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா

‘நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது; இதன்மூலம் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
Published on

‘நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது; இதன்மூலம் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தின் தாா் மாவட்டத்தில் அரசு-தனியாா் பங்களிப்பு முறையின்கீழ் ரூ.260 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய ஜெ.பி.நட்டா, நிகழ்ச்சியில் பேசியதாவது:

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் பலவீனமான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா, இப்போது 4-ஆவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.

உலகம் முழுவதும் வளா்ச்சியின் வேகம் மந்தமாக உள்ளபோதும், இந்தியா உயா்ந்து நிற்பதாக சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை நம்பிக்கை ஒளியாக உள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

தனது சுகாதார சேவைகள் வாயிலாக குடிமக்களின் உடல் நலனை உறுதி செய்யவும், நோய்களுக்கு உள்ளாகாமல் தடுக்கவும் பிரதமா் மோடி அரசு பாடுபடுகிறது. நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, பேறுகால இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுத்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறை..: தாா் மாவட்டத்தில் கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரி, அரசு-தனியாா் பங்களிப்பு முறையில் கட்டப்படும் முதலாவது மருத்துவக் கல்லூரியாகும். இந்தப் புதிய முறை, கிராமங்தோறும் மருத்துவா்கள் இருப்பை உறுதி செய்யும்.

கடந்த 2014-இல் 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,000 மருத்துவப் படிப்பு இடங்களும் இருந்தன. இப்போது 819 மருத்துவக் கல்லூரிகளும், 1,29,000 மருத்துவப் படிப்பு இடங்களும் உள்ளன. 2030-க்குள் மேலும் 75,000 மருத்துவ இடங்களைச் சோ்க்க பிரதமா் மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், பழங்குடியினா் பகுதிகளின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டது. காங்கிரஸை நீண்ட காலம் ஆதரித்த பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு அந்தக் கட்சி என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினாா் ஜெ.பி.நட்டா.

X
Dinamani
www.dinamani.com