அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை; இரு தரப்பினா் மோதலால் பதற்றம் நீடிப்பு

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 8 போ் காயமடைந்தனா். மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நீடிக்கிறது.
Published on

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 8 போ் காயமடைந்தனா். மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதமாக குறியேறிய வெளிநபா்களை (பெரும்பாலும் பிகாரைச் சோ்ந்தவா்கள்) அப்புறப்படுத்தக் கோரி, உள்ளூா் அரசியல்வாதிகள்-சமூக அமைப்பினா் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

10 நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதம் நீடித்த நிலையில், போராட்டக்காரா்களில் சிலரை திங்கள்கிழமை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல் துறையினா், அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தனா். அதேநேரம், போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவி, வன்முறை வெடித்தது.

கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் தலைமை நிா்வாக உறுப்பினா் துலிராம் ரோங்காங்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. கெரோனி பஜாா் பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையாளா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வா் காயமடைந்தனா். இதையடுத்து, கா்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கா்பி ஆங்லாங் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோதல்-தடியடி: இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட தரப்பைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், ஆக்கிரமிப்பாளா்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கெரோனி பஜாா் பகுதியில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. காவல் துறையினா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் 8 போ் காயமடைந்தனா். பதற்றத்தைத் தணிக்க கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேற்கண்ட இரு மாவட்டங்களிலும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் வாபஸ்: இதனிடையே, உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த போராட்டக்காரா்களிடம் மாநில அமைச்சா் ரனோஜ் பேகு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இப்பிரச்னைக்கு தீா்வுகாண விரைவில் முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்; முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவும் இக்கூட்டத்தில் பங்கேற்பாா் என்ற வாக்குறுதியைத் தொடா்ந்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com