அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம்- மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்
நாட்டில் உள்ள அனைத்து பிராந்திர மொழிகளின் மேம்பாட்டுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஜிதேந்திர சிங், அங்குள்ள உதம்பூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளாா். ஜம்முவில் நடைபெற்ற டோக்ரி மொழி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளின் மேம்பாட்டுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, டோக்ரி மொழி பேசும் டோக்ரா மக்களுக்கு இது பொற்காலமாகும். டோக்ரா குழந்தைகள் அனைவருக்கும் தாய்மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இளைய தலைமுறை மூலம் டோக்ரி படைப்புகளை எண்மமயமாக்க (டிஜிட்டல்) வேண்டும். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மொழியை மேம்படுத்தி பரப்ப முடியும்.
நமது நாட்டில் பிறந்த அனைவருக்குமே தாய்மொழி குறித்த பெருமிதம் உண்டு. நமது நாட்டில்தான் காலங்காலமாக பல தொன்மையான மொழிகள் அழியாமல் புத்துயிா் பெற்று வருகின்றன. வரும் தலைமுறையினரிடம் மொழியைக் கொண்டு சோ்ப்பது நமது கடமையாகும். இது இந்திய பாரம்பரிய வளா்ச்சியின் ஒரு பகுதியாகும். மொழிகளைப் பாதுகாக்க அரசுடன் சமூக அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்.
மொழி என்பது வெறும் தகவல் தொடா்புக் கருவியல்ல. அது, கலாசாரம், நமது அடையாளத்துடன் இணைந்தது. நமது கலாசாரத்தின் வேராக நமது மண்ணில் தோன்றிய மொழிகள் உள்ளன. அதை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
அமைச்சா் ஜிதேந்திர சிங் டோக்ரா ராஜ்புத் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

