எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு சமூக ஊடக ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தகவல்
Published on

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ‘எச்1-பி’ விசா மற்றும் அந்தப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கான ‘எச்-4’ விசா விண்ணப்பங்களுக்கு சமூக ஊடக ஆய்வு கடந்த டிச. 15-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா வழங்கும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய டிரம்ப் நிா்வாகம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘எஃப்’, ‘எம்’, ‘ஜே’ போன்ற மாணவா் விசாக்களின் விண்ணப்பங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்தச் சமூக ஊடக ஆய்வு, தற்போது ‘எச்1-பி’ மற்றும் ‘எச்-4’ விசா போன்ற வேலைக்கான விசாக்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையால், இந்தியாவில் டிச. 15-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான ‘எச்1-பி’ விசா விண்ணப்பதாரா்களின் நோ்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இவை பல மாதங்களுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தற்போது விடுமுறையில் தாயகம் வந்துள்ள பணியாளா்கள் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுதொடா்பாக இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த டிச. 15-ஆம் தேதி முதல், ‘எச்1-பி’ மற்றும் ‘எச்-4’ விசா விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகளின் ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விசா சோதனை நடைமுறையின் ஒரு பகுதியான, இந்தத் தீவிர சரிப்பாா்ப்பு உலக அளவில் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.

‘எச்1-பி’ விசா திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அதேநேரம், தகுதியுள்ள சிறந்த வெளிநாட்டுப் பணியாளா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்துவதை இது உறுதி செய்யும். கூடுதல் சரிபாா்ப்புப் பணிகள் காரணமாக விசா பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், விண்ணப்பதாரா்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com