சல்மான் குா்ஷித்
சல்மான் குா்ஷித்

அரசு நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் வெளியுறவு அமைச்சரின் மனைவி மீது குற்றப் பத்திரிகை: கவனத்தில் எடுத்துக் கொண்ட உ.பி. நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் கருவிகளை வழங்கியதில், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குா்ஷித்தின் மனைவி லூயிஸ் குா்ஷித் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை, உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் கருவிகளை வழங்கியதில், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குா்ஷித்தின் மனைவி லூயிஸ் குா்ஷித் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை, உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2009-2010-ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை கால்கள் மற்றும் கருவிகளை வழங்குவதற்கான முகாம்களை நடத்த ஜாகிா் உசேன் நினைவு அறக்கட்டளைக்கு மத்திய அரசு ரூ.71.50 லட்சம் நிதியுதவி அளித்தது.

ஆனால் முகாம்களை நடத்த அந்த நிதி பயன்படுத்தப்படாமல், அறக்கட்டளையின் நலனுக்காவும் தனிப்பட்ட லாபத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்தப் பண முறைகேட்டில் ஜாகிா் உசேன் நினைவு அறக்கட்டளை மற்றும் அந்த அறக்கட்டளையின் திட்ட மேலாளா் லூயிஸ் குா்ஷித் உள்ளிட்ட சிலா் நபா்கள் மீது, உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் பண முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவா்களின் ரூ.45.92 லட்சம் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், அவா்களை குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கவும் கோரி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.

2009-10-ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள போஜிபுரா பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் கருவிகள் அளிக்கும் நிகழ்ச்சியை ஜாகிா் உசேன் நினைவு அறக்கட்டளை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் செயற்கை கால்கள் மற்றும் கருவிகளை வழங்க அளிக்கப்பட்ட அரசு நிதி, போலி முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com